Homeசெய்திகள்தமிழ்நாடுஇடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி: புதிய கட்டிடம் கட்டப்படும் என திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் உறுதி

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி: புதிய கட்டிடம் கட்டப்படும் என திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் உறுதி

-

- Advertisement -

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி: தொகுதி நிதியில் புதிய கட்டிடம் கட்டப்படும்; திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் அதிரடி வாக்குறுதி!
​பாதுகாப்பு பயத்தால் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை; நேரில் ஆய்வு செய்து மக்கள் குறைகளைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ!
அங்கன்வாடி

திண்டுக்கல் அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வரும் தற்காலிக அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்ட திண்டுக்கல் தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார், தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாகப் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் எனப் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

we-r-hiring

அங்கன்வாடி கட்டிடத்தின் அவல நிலை:
​திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தனகுடில் கிராமத்தில் கடந்த 2014-2015ஆம் நிதியாண்டில் அரசு சார்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. பராமரிப்பின்றிப் போனதால் இந்தக் கட்டிடம் மற்றும் கழிப்பறைகள் முழுமையாகச் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
​இதன் காரணமாக, குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருகில் உள்ள பழமையான ஓட்டு வாடகை கட்டிடம் ஒன்றிற்கு இந்த அங்கன்வாடி மையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

தற்காலிக கட்டிடத்திலும் ஆபத்து – பாதியாகக் குறைந்த குழந்தைகள்:
​தற்போது செயல்பட்டு வரும் அந்த வாடகை கட்டிடமும் மிக மோசமாகச் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கட்டிடம் நல்ல நிலையில் இருந்தபோது 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு படித்து வந்தனர். ஆனால், தற்போதைய கட்டிடத்தின் ஆபத்தான நிலையைப் பார்த்துப் பயந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைந்துள்ளது.

​அடிப்படை வசதிகளின்றித் தவிப்பு:
​இந்த தற்காலிக வாடகை கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொருட்கள் வைக்க இடமின்றியும், குழந்தைகள் அமர இடமின்றியும் தவித்து வருகின்றனர். மேலும், இங்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி அல்லது குழந்தைகள் கைகழுவத் தேவையான தண்ணீர் வசதி என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை.
​அரசுத் தரப்பில் இருந்து இந்த மையத்திற்கு மாத வாடகையாக வெறும் ₹1,000 மட்டுமே வழங்கப்படுவதால், இந்தச் குறைந்த தொகையில் வேறு நல்ல கட்டிடத்தை வாடகைக்கு எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதோடு, இந்த மையத்தில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவரே சமையல் முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்தையும் தனியாகக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதிகாரிகளின் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு:
​புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி ஊர் நாட்டாமை மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மூன்று முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் அதிரடி ஆய்வு:
​அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, குழந்தைகள் ஆபத்தான சூழலில் படித்து வரும் தகவல் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ செந்தில்குமார், பழுதடைந்த கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

​பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அவர், “பழைய அங்கன்வாடி கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MLACDS) விரைந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரப்படும்” எனப் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். இதற்கான பூர்வாங்க பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எம்.எல்.ஏ-வின் இந்த உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ