தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, உண்மை நிலையை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், உயர்கல்வி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன. தேர்வுத் தாள் 2-ன் மதிப்பீட்டு நடைமுறையில் எழுந்துள்ள ஐயங்கள், மதிப்பெண் வழங்கலில் வெளிப்பட்டுள்ள தர்க்க ரீதியாக பொருந்தாத முரண்பாடுகள் மற்றும் தேர்வு வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவை ஆயிரக்கணக்கான தேர்வர்களிடையே கடுமையான நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளன.

தேர்வுத் தாளின் இரண்டாம் பகுதியை உடனடியாக மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும். மதிப்பீட்டு நடைமுறை, அளவுகோல்கள், மதிப்பெண் சீரமைப்பு ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிப்பதோடு, தேர்வர்களுக்கு அவர்களின் மதிப்பெண் மற்றும் கட்-ஆஃப் (Cut-off) விவரங்களைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும். இந்த குளறுபடிகள் குறித்த மறுஆய்வு முழுமையாக நிறைவடையும் வரை, உதவிப் பேராசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே 12 ஆண்டுகளாகப் பணி நியமனங்கள் இல்லாத சூழலில், இந்த மறுஆய்வுப் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும்.
காத்திருப்புப் பட்டியல் முறை (Waiting List): தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் மொத்தம் 9,000 ஆக உள்ளன. 4,000 இடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி, தற்போது 2,708 இடங்களுக்கு மட்டுமே நியமன நடவடிக்கைகள் நடக்கின்றன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பணிநியமனத்தின் போதும் ‘காத்திருப்பு பட்டியல்’ உருவாக்கப்பட்டு, புதிய அறிவிப்புக்கான காலதாமதத்தைத் தவிர்த்து, அந்தப் பட்டியலிலிருந்தே காலிப் பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் நடைபெறும் ஆசிரியர் நியமனங்களிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை, சமூக நீதி மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசும் ஆசிரியர் தேர்வு வாரியமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மை நிலையை அறிய உரிய நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் நியமனங்களில் எழுந்துள்ள புகார்கள் மீது விரைவான விசாரணை நடத்தி, முறேகடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!
