Homeசெய்திகள்தமிழ்நாடுஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க- ஈபிஎஸ்

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க- ஈபிஎஸ்

-

கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy
edappadi palanisamy

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு சேவையாற்றக் கூடிய துறைகளில் மிக முக்கியமான துறை மருத்துவத் துறை. எங்கள் ஆட்சியில் இந்தியாவின் முதன்மை மருத்துவ மாநிலமாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. முக்கியமாக, கொரோனா நோய்த் தொற்றின்போது பிரதமர் மோடி கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பாராட்டினார். அவரது இந்தப் பாராட்டிற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களும் என்றால் அது மிகையல்ல.

இவ்வாறு தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களையும், ஒப்பந்த செவிலியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் நட்டாற்றில் விட்டது இந்த விடியா திமுக அரசு. எனது தலைமையிலான அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளுக்கு சுமார் 1,820 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கொரோனா நோய்த் தொற்றின்போது தன்னலம் கருதாது கொரோனா நோயாளிகளுக்காகப் பணியாற்றிய இந்த ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய இந்த விடியா அரசு இன்று தன்னலம் கருதாது பணிபுரிந்து வந்த ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி உள்ளது இந்த தி.மு.க. அரசு.

தி.மு.க.-வின் தேர்தல் அறிக்கை எண். 356 “ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்”-ன்படி, தங்களது பணி, நிரந்தரம் செய்யப்படும் என்று எண்ணியிருந்த ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் வகையில், 2022-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய இந்த தி.மு.க. அரசு, 2023-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த செவிலியர்களையும் வீட்டிற்கு அனுப்பி அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எப்போதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதை வசதியாக மறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ள இந்த தி.மு.க. அரசு, ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று வெளியிட்ட அரசாணைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்து, தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த தி.மு.க. முதல்-அமைச்சரை வற்புறுத்துகிறேன். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும்போது, கொரோனா நோய்த் தொற்று போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த ஒப்பந்த மருத்துவர்களுக்கும், ஒப்பந்த செவிலியர்களுக்கும், முன்னுரிமை மதிப்பெண் வழங்கி, அவர்களுடைய பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ