2026-27ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு 422 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,95,895 இடங்கள் கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், 1,51,168 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதன் மூலம் சுமார் 77.17 சதவீத இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், 44,727 இடங்கள் காலியாக உள்ளன.


மாணவர் சேர்க்கையில் 3% சரிவு
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் சுமார் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025-26ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,53,445 இடங்கள், அதாவது 80.49 சதவீத இடங்கள் நிரம்பியிருந்தன.
இதற்கு முந்தைய 2024-25ஆம் கல்வியாண்டில் 1,23,031 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டு சேர்க்கை நிலவரம் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாணவர்களின் தேர்வு மற்றும் போட்டி குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.
கல்லூரிகளின் சேர்க்கை நிலவரம்
இந்த ஆண்டு 31 பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும், 139 கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 305 கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.
அதே நேரத்தில், 56 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். மேலும், 26 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% இடஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஒதுக்கீட்டின் கீழ் 99.87 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 இடங்கள் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வியாளர் அஸ்வின் கூறுகையில், பொதுப்பிரிவில் குறைந்த அளவிலான சேர்க்கை நடைபெற்ற சில கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் உள்ளிட்ட அம்சங்களை மாணவர்கள் கவனித்து தேர்வு செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மண்டலத்திற்கு மாணவர்கள் அதிக முன்னுரிமை
மண்டல வாரியான சேர்க்கை நிலவரத்தில் கோவை மண்டலம் மாணவர்களின் அதிக விருப்பத்தை பெற்றுள்ளது. கோவை மண்டலத்தில் 61,295 மாணவர்களும், சென்னை மண்டலத்தில் 47,487 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டலத்தில் 16,393 மாணவர்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 15,629 மாணவர்களும், மதுரை மண்டலத்தில் 10,364 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
கணினி சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு
பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை, கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கணினி சார்ந்த படிப்புகளில் சுமார் 94,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இ.சி.இ பாடப்பிரிவில் 28,364 மாணவர்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 16,857 மாணவர்களும், இ.இ.இ பிரிவில் 14,848 மாணவர்களும், சிவில் இன்ஜினியரிங்கில் 8,354 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் 1,09,840 மாணவர்களும், தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் 41,328 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
கல்லூரிகளின் உள்கட்டமைப்பும் முக்கிய காரணியாக மாறுகிறது
கடந்த 8 ஆண்டுகளின் சேர்க்கை நிலவரங்களை பார்க்கும்போது, மாணவர்களின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு மொழி பயிற்சி போன்ற கூடுதல் வசதிகள் மாணவர்களின் தேர்வில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டில் முன்னணியில் இருந்த சில கல்லூரிகள் தேவையான நவீன வசதிகளை மேம்படுத்தாததால் மாணவர்களின் வரவேற்பில் மாற்றத்தை சந்தித்துள்ளதாகவும், அதே நேரத்தில் முன்பு பின்தங்கியிருந்த சில கல்லூரிகள் உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தி முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை முடிவுகள், மாணவர்களின் பாடப்பிரிவு மற்றும் கல்லூரித் தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்துவதுடன், கல்லூரிகள் தங்களது கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
