மதுரை ரயிலில் தீ- ரயிலில் பயணித்த 5 பேர் மீது கைது
மதுரையில் தீவிபத்து நடந்த ரயில் பெட்டியில் சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் பயணம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழந்த ஒன்பது நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன் தினம் சென்னைக்கு அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது. இதனிடையே விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.