கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பயன் பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்ட நிலையில், சிலருக்கு தொகை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காத பெண்கள் புகார் அளிப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பயனாளிகளின் வங்கி கணக்கில் திடீரென ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியதுடன், கூடுதலாக கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து மொத்தமாக ரூ.5000 வழங்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து, 2023 முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நேரடி நிதி உதவி வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் பல்வேறு தகுதிநிபந்தனைகள் காரணமாக சிலர் பயன் பெற முடியாத நிலை இருந்தாலும், பின்னர் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு உரிமைத்தொகை வழங்குவதில் தடை ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலையை முன்னிட்டு, அரசே முன்வந்து தொகையை முன்கூட்டியே வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து பல இடங்களில் பெண்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால், சில பகுதிகளில் மாதந்தோறும் ரூ.1000 பெற்று வந்த பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு ஆகாததால் அதிருப்தி நிலவுகிறது. ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி மனுக்கள் அளித்தனர்.
அரசு தரப்பில், தொகை வரவு ஆகாதவர்கள் அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்றும், அல்லது cmhelpline.tnega.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு ஆதார் இணைப்பு, KYC விவரங்கள் மற்றும் DBT செயல்பாடு சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொகை கிடைக்காத பெண்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும், பெறப்பட்ட புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


