நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கல்லாறு – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே என்.எம்.ஆர் பாதையின் குறுக்கே பாறைகள் மற்றும் மண் சரிந்துள்ளதாகவும், இதனால் ரயில் பாதையில் இடையூறு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இன்று ரயில்கள் இயக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையம் – உதகை – மேட்டுப்பாளையம் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், வரும் நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை – மேட்டுப்பாளையம் ரயில்கள் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு உதகமண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்படும் மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்குப் உதகமண்டலம் புறப்பட வேண்டிய சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் நாளை மறுநாள் காலை 11.25 மணிக்கு உதகமண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் குன்னூர் – உதகமண்டலம் இடையே ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் என்றும் தெற்குரயில்வே கூறியுள்ளது