தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு விருதை வழங்கினார். கேரள மாநிலம் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி நிலையத்தின் (Liquid propusion system centre) இயக்குனராக பொறுப்பில் இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன்.
விஞ்ஞானி நாராயணன், இஸ்ரோவின் வெற்றிகரமான ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் கிரயோஜனிக் இயந்திர தயாரிப்பு ஆய்வின் தலைவராக செயல்பட்டவர். சந்திரயான்-2 தோல்வி குறித்து கண்டறிய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் செயல்பட்டு, அதிலிருந்து பல்வேறு தரவுகளை சேகரித்து, சந்திரயான் 3 லேண்டரில் மாற்றங்களை மேற்கொண்டதன் மூலம் சந்திரயான்-3 வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோரக்பூர் ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வரும் ஐ.ஐ டி.யின் முன்னாள் மாணவரான விஞ்ஞானி நாராயணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவரான விஞ்ஞானி நாராயணன், 1990 ஆம் ஆண்டு கோரக்பூர் ஐஐடியில் எம்.டெக் கிரயோஜனிக் என்ஜின் ஆராய்ச்சியில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடித்த விஞ்ஞானி நாராயணன், 2018 ஆம் ஆண்டு கோரக்பூர் ஐஐடியின் சிறப்புமிகு மாணவர் விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.