சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் இந்துசமய அறநிலையத் துறை தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோவிலில், தீட்சிதர்களால் தனக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிவித்தார். மன கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப்படுத்த படுகின்றனர் என்றும், பக்தர்கள் வரும் வரை தான் கோவில்; இல்லாவிட்டால் கோவில் பாழாகி விடும் என்றும் நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
மேலும், கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார். பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு வரும் அக்.21ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.