நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 466 ஆவது கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தர்ஹா மினாரக்களில் பாய்மரக் ஏற்றப்பட்ட நிலையில், நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தர்ஹா மினாரக்களில் ஏற்றப்பட உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக நாகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை நகர்மன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

இரவில் விண்ணதிர வானத்தில் வர்ணஜாலமிட்ட வானவேடிக்கை மற்றும் பல்வகை வர்ண வெடிகளை கண்டு அங்கிருந்த குழந்தைகள் குதூகலமடைந்தனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் 2 ஆம் தேதியும், 3 ஆம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.