spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு தில்லுமுல்லுகளை ‘தில்’லாக அரங்கேற்றும் தைரியம் எப்படி வந்தது?

we-r-hiring

”தமிழ்நாட்டில் பாஜகவின் சித்து வேலைகள் செல்லாது”

”என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் நோட்டாவுக்கு கிடைக்கும் ஓட்டு கூட பாஜகவிற்கு கிடைக்காது.”

”எப்படிப் பார்த்தாலும் பாஜகவால் தமிழ் நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது..”

இந்த மாதிரியான சொற்பிரயோகங்கள் எல்லாவற்றையும் தூக்கி சூறையாடி, தமிழ்நாட்டிலேயே அதிகம் வாக்குகள் வாங்கும் கட்சியாக பாஜக மாறிவிட்டது, இந்தியத் தேர்தல் ஆணையத்தால், இங்கே, அதுவும் ஓராண்டுக்கு முன்பே இந்த அசூர மாறுதல் அரங்கேறிவிட்டதை நாம் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.

மிகச் சமீபத்தில் தான் தேர்தல் ஆணைய திருட்டிற்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பெரிய பேரணியை நடத்தினார், ராகுல் காந்தி. அதற்கு முன்பாக தேர்தல் ஆணைய திருட்டிற்கு எதிராக நாட்டு மக்கள் ஆறு கோடிப் பேரை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளது, காங்கிரஸ்.

ஆனால், இந்திய தேர்தல் ஆணையம்  பீகாரில், ஜார்கண்டில், மகாராஷ்டிராவில் செய்ததையெல்லாம் விஞ்சி தமிழகத்தில் இப்படியெல்லாம் தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் என நாம் எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.

உண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் செய்துள்ள தில்லுமுல்லுகள் திகைக்க வைக்கின்றன. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் பாஜகவானது அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி ஒன்பது தொகுதிகளில் இரண்டாம் இடம் பெற்றது அல்லவா? நாமெல்லாம் கூட, ‘சரி, சில குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துவிட்டது போலும்’ என்று நினைத்துக் கடந்து விட்டோம்.

ஆனால், அப்படிக் கடந்து போக முடியவில்லை, சுபத்ரா தேவியால். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருக்கும் சுபத்ரா தேவி தொடக்கத்தில் ஊழல் ஒழிப்பு இயக்கம், அறப்போர் இயக்கம் என்று பயணித்த ஒரு சமூக ஆர்வலராவார்.தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ”நான் கிரவுண்ட்  ரியாலிட்டி தெரிந்தவள். அதனால் எனக்கு சந்தேகம் வந்தது. எனவே, நான் வாக்காளர் லிஸ்டை அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்தின் வெப் சைட்டை நோட்டம்விட்டேன். பேரதிர்ச்சியாக இருந்தது. ‘இவ்வளவு மோசடிகள் நடக்குமா? அதுவும் பொறுப்புள்ள தேர்தல் ஆணையம் இத்தனை குரூரமாக மோசடியில் ஈடுபட முடியுமா?’ என வியந்தேன்.

உதாரணத்திற்கு நான் ஒரு தொகுதியின் சில பூத்களில் உள்ள வாக்காளர்கள் லிஸ்டையும், அவங்க குடும்ப விவரங்களையும், அங்கே விழுந்த வாக்குகளையும் உங்களுக்கு காட்டுகிறேன்.

கோயம்பத்தூர் வடக்கு பகுதியில் உள்ள பூத் எண் 24.
இதில் மொத்த வாக்காளர்கள் 1,262.
மொத்த குடும்பம் 274.

பொதுவாக பூத்தில் வாக்காளர் வரிசையில் இடம் பெற்றுள்ள குடும்பங்களில் அம்மா, அப்பா, மகன், மகள், பாட்டி, தாத்தா இப்படி உறவின் முறையைக் குறிப்பிடாமல் எந்தப் பெயரும் இருக்காது. ஆனால், இந்த உறவின் முறைக்கு அப்பால் – அந்தக் குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரே ஒரு புதியவரை – அந்தந்த குடும்பங்களில் – சொருகியுள்ளது, இந்திய தேர்தல் ஆணையம். ஏதோ, தவறுதலாக ஒரிரு குடும்பங்களில் அப்படி இடம் பெற்றால் கூட நமக்கு சந்தேகம் வராது. ஆனால், மொத்தமுள்ள 274 குடும்பங்களில், 185 குடும்பங்களுக்குள் இப்படித் தனி நபர்களை நுழைத்துள்ளது பாஜகவின் தேர்தல் ஆணையம்.

இத்தோடு நின்றார்களா? என்றால், இல்லை. ஒற்றை நபராக வசிப்பவர்கள் – அதாவது கட்டை பிரம்மச்சாரிகளானவர்களாக ஒரு வீடு, ஒரு ஓட்டு என்பதாக 348 பொய் விலாசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி குறிப்பிட்டுள்ள விலாசத்தை தேடினால், அப்படி ஒரு வீட்டை கண்டடைய முடியவில்லை. ஆக, இல்லாத விலாசத்தில் 348 தனி நபர்களை குடி வைத்து வீடும் தரப்பட்டுள்ளது.

இந்த பூத் 24 ஆம் எண்ணில், திமுக 178 ஓட்டுகள், அதிமுக வாங்கியது 35 ஓட்டுகள், ஆனால், பாஜகவோ 369 ஓட்டுகள் பெற்றுள்ளது.

அதாவது, மொத்த ஓட்டில் பாஜகவிற்கு 61 சதவிகிதம்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு திமுக, அதிமுகவை விஞ்சி 61 சதவிகித வாக்குகள் விழுந்துள்ளது என்பது எவ்வளவு இமாலய மோசடி!

இதே போல இன்னொரு பூத் எண்;95 கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது.

இதில் மொத்த ஓட்டுகள்; 1,284
மொத்த குடும்பம்: 268,
இதில் 150 குடும்பங்களில் சம்பந்தமில்லாத தனி நபர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு நபர், ஒரு வீடு என்பதாக 382 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐந்து வாக்காளர்களுக்கு இரண்டு முகவரியில் ஓட்டுகள் உள்ளன.

இந்த 95 வது பூத்தில்,திமுக வாங்கியது; 228 ஓட்டுகள்,பாஜக வாங்கியது 390 ஓட்டுகள்,அதிமுக வாங்கியுள்ளது 50 ஓட்டுகளே, நாம் தமிழர் வாங்கியது 29 ஓட்டுகள் அதாவது, பாஜகவிற்கு  56 சதவிகித ஓட்டுகள்!

இதே போல இந்த பூத்தில் திருமுருகன் நகர் முதல் தெருவில் 9 க்கு மேல் 15 பேர் கொண்ட எட்டு குடும்பங்கள் உள்ளன.

இவையெல்லாம் மொத்த முறைகேட்டில் ஒரு சில துளிகள்! இப்படி வரைமுறையின்றி எக்கச்சக்கமான  பூத்துகளில் நடந்துள்ளன.

இந்த முறைகேடுகளை பாஜகவிற்கு ஓரளவு செல்வாக்குள்ள தொகுதியில் செய்திருப்பதன் மூலமாக பெரிய சந்தேகம் வராது என்ற தைரியத்தில் செய்துள்ளனர். பாமக போட்டியிட்ட தர்மபுரி தொகுதிக்கும் செய்து தந்துள்ளனர்.’’ என்கிறார், சுபத்ரா தேவி.

இப்படி நடந்த முறைகேடுகள் தெரியக் கூடாது என்று தான் தேர்தலுக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பு செய்துள்ளனர். அதாவது, ஏப்ரல் -19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல். இந்த மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டு இருப்பது மார்ச்-27 என்கிறது தேர்தல் ஆணையப் பதிவு. இதுவே ஒரு அப்பட்டமான விதிமுறை மீறலாகும்.

தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பே இறுதி வாக்காளர் லிஸ்ட் வெளியிடப்பட்டுவிடும். அதற்கு பிறகு பேர் சேர்ப்பு இருக்காது. ஆகவே, அந்த லிஸ்டை எடுத்து வைத்துக் கொண்டு தான் கட்சிக்காரர்கள் பூத்தில் உட்கார்ந்து சரி பார்ப்பார்கள். எனவே, இந்த தில்லுமுல்லுகள் தெரிய வாய்ப்பின்றி போய்விட்டது.

இதனால் தான் ’’தேர்தலுக்கு  சுமார் ஒரு மாத நெருக்கத்தில் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியலை – மெஷின் ரீடபிள் வடிவில்- கொடுக்க வேண்டும்’’ என்றார், ராகுல்காந்தி.  தேர்தல் ஆணையத்திற்கு நேர்மை இருந்தால் இதை தருவதில் தயக்கம் கொள்ள வழியில்லை.

இந்த முறைகேடுகளை வைத்து அவதானிக்கும் போது, மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடிகளையும், கோளாறுகளையும்  செய்து தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு அதிக ஓட்டுகள் விழுந்ததாக காண்பித்து இருக்க வாய்ப்புள்ளது என்றே எண்ண முடிகிறது.

இதற்காகத் தான், நாம் வாக்கு சீட்டு முறைமையை கேட்கிறோம். இல்லையெனில், குறைந்தபட்சமாக விவிபேட்டையாவது நடைமுறைபடுத்தக் கோருகிறோம். போடப்படும் வாக்குகள் உண்மையில் அளிக்கப்பட்டவர்களை சென்றடைந்ததா? என்பதில் வாக்காளர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சி.சிடிவி பதிவுகளையும் தர மறுக்கிறார்கள். எதிர்கட்சிகளுக்கு படிவம் 17C கொடுக்காமல் தவிர்க்கிறார்கள் எனில், இவர்கள் தில்லுமுல்லுகளை அரங்கேற்றவும், அதை மறைக்கவும் திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள் என்றே அர்த்தமாகும்.

மேலும், வாக்களித்தோர் எண்ணிக்கையை சரியாக அறிவிப்பதில்லை. பதிவான வாக்கு சதவிகிதத்தை அன்றைய தினம் அறிவிப்பது ஒன்றாகவும், பல நாட்கள் கழித்து அதை அறிவிக்கும் போது வேறாகவும் உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் வலிந்து சில மாற்றங்களை செய்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.

மேலும் பீகார் தேர்தலை பொறுத்த வரை மொத்த வாக்காளர்களைவிட, பதிவான வாக்குகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டுகிறது தேர்தல் ஆணையம் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

‘தேர்தல் ஆணையர்கள் என்ன செய்தாலும் அவர்கள் மீது வழக்கு பாயாது’ என்ற சட்ட பாதுகாப்பு தந்த பிறகு, தில்லுமுல்லுகள் செய்வதில் ‘தில்’லு காட்டத் தானே செய்வார்கள் தேர்தல் ஆணையர்கள். இதை முற்றிலும் தடுத்து நிறுத்தி முற்றுபுள்ளி வைக்காமல், தேர்தல்களில் எதிர்கட்சிகள் போட்டியிடுவதும், மக்கள் வாக்களிப்பதும் பயனற்றது என்பதே அறத்தின் குரலாகும்” என்கிறார் சுபத்ரா தேவி.

SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!

MUST READ