கரைக்குடியில் உள்ள செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்காக ரூ.3.97 கோடியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.


பயன்படுத்தப்படாத செட்டிநாடு விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. செட்டிநாடு ஏரோநாடு விமானப் போக்குவரத்து மையத்திற்கான உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதில் தனியார் பங்களிப்பைக் கோரி தமிழக அரசு ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது. காரைக்குடி கானாடுகாத்தான் விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் இந்த விமான நிலையம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தாலுகாவில் அமைந்துள்ளது.
பறக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கும், ட்ரோன் சோதனைக்கும் இந்த விமான ஓடுபாதையை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், EKVI, சேலம் விமான நிலையத்திலிருந்து செயல்பட, பறக்கும் பயிற்சி அமைப்பின் (FTO) ஒப்புதலைப் பெற்றது – இது மாநிலத்தின் முதல் பறக்கும் பயிற்சி அமைப்பாகும். கோவில்பட்டி விமான ஓடுதளத்தை ஒரு FTO-க்கு வழங்கவும், மாநில அரசு திட்டமிட்டுள்ளது. FTO-விற்குப் பயன்படுத்தப்படும் மூன்றாவது செட்டிநாடு விமான நிலையம் விமானப் போக்குவரத்து மையமாக மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

செட்டிநாடு விமான ஓடுதளத்தைச் சுற்றியுள்ள நிலம் இப்போது தரிசாக உள்ளது. ஆனால் இந்த விமான ஓடுதளத்தின் ஓடுபாதை இன்னும் எந்த சேதமும் இல்லாமல் செயல்படும் நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 சிறிய ஓடுபாதைகளைக்கொண்ட இந்த விமான ஓடுபாதை இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒரு விமான தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1930களில் செட்டிநாடு விமான ஓடுதளம் இந்தியாவின் முதல் பறக்கும் கிளப்புகளில் ஒன்றைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றனர். 1953ஆம் ஆண்டில் ஜூபிடர் ஏர்லைன்ஸின் முதன்மை மைய விமான நிலையமாகவும் செயல்பட்டது. பின்னர் இது அழகப்பா கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் நிறுவனர் அழகப்பா செட்டியாரால் இயக்கப்பட்டது.


