spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மாநிலம் முழுவதும் அருங்காட்சியக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்

we-r-hiring

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் 26.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் கட்டப்பட்ட மற்றும் கட்டப்படவுள்ள பல முக்கிய கட்டிடத் திட்டங்களைத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டு திட்டங்கள் இதன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.

முதலில், 5 கோடி ரூபாய் செலவில் சேலம் அஸ்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் அரசு அருங்காட்சியகக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது 50 சென்ட் நிலப்பரப்பில் 9,840 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் ஜல்லிக்கட்டு நடுகல், கல்வெட்டுகள் மற்றும் நாமக்கல் கவிஞர் வரைந்த மகாத்மா காந்தியின் ஆளுயர ஓவியம் உள்ளிட்ட பல அரிய வரலாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், 12.43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தின் புதிய கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் இதுவரை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. மதுரை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில், 14,420 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் வீரக்கற்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மற்றும் மாமல்லபுரத்தில் அமைக்கப்படவுள்ள தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை அருகே 4 ஏக்கர் நிலப்பரப்பில் 52,000 சதுர அடியில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளது. இதில் தமிழர் நாகரிகம், இலக்கியச் செழுமை, கட்டடக்கலை மரபு, சம்புவரையர் ஆட்சி மற்றும் வந்தவாசிப் போரின் வரலாறு உள்ளிட்ட அம்சங்களை எடுத்துரைக்கும் ஒன்பது காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

மாமல்லபுரத்தில், பல்லவர் காலச் சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலைச் சிறப்புகளால் UNESCO உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்நகரில், கிழக்கு கடற்கரைச் சாலையில் 4.5 ஏக்கர் நிலத்தில் 60,500 சதுர அடியில் 109.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் இரண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 48,000 சதுர அடியில் 13 காட்சிக்கூடங்களுடன் 51.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய படிமக் கூடத்தில் சோழர் கால ஐம்பொன் படிமங்கள் மற்றும் தமிழர்களின் உலோகக் கலைத்திறனை வெளிப்படுத்தும் சிறப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அதே வளாகத்தில் 28,000 சதுர அடியில் 34.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கமும் உருவாக்கப்பட உள்ளது. இதில் 1937ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையிடமிருந்து பெறப்பட்ட 400 அரிய சிந்துவெளி பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 1924ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிகத்தை உலகறியச் செய்த ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இவ்வரங்கம் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன், அருங்காட்சியகத் துறை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், காணொலிக் காட்சி வாயிலாக விருதுநகரிலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இணைந்தனர்.

குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் – முதல்வர்

MUST READ