Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பணி நியமனம்: அரசாணை வெளியிடாதது ஏன்? - ஆர்.பி. உதயகுமார்...

முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பணி நியமனம்: அரசாணை வெளியிடாதது ஏன்? – ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!

-

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரத்தினருக்கும், தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கும் அரசாணை வெளியிடாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வருவது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “ஊரான் வீட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள் சார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசுப் பணி நியமனங்கள் ரகசியமாக வைக்கப்படுவதற்கான மர்மம் என்னவென்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்

we-r-hiring

ரகசிய நியமனங்களும் தனி அறை ஒதுக்கீடும்:

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வழங்குவேன் என்று தேர்தல் நேரத்தில் முழக்கமிட்ட த.வெ.க அரசு, தற்போது தனது பவர் சென்டர்களுக்கு ரகசியமாகப் பதவிகளை வழங்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்த்தான ஜோதிடரின் ரத்து செய்யப்பட்ட நியமனம்:

ஆரம்பத்தில் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரியாக வழங்கப்பட்ட அரசுப் பணி அரசாணைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.

ஆலோசகர்கள் நியமனம்:

அதனைத் தொடர்ந்து, விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட தகவல் தாமதமாகவே (மே 22) வெளிவந்தது. இவர்களுக்கான முறையான பகிரங்க அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய அலுவலகத்தில் இடங்கள்:

நாமகிரி கவிஞர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முதல்வர் அலுவலகத்தில், ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகிய நான்கு பேருக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியிடங்கள் குறித்த மர்மம்:

தேர்தல் பாதுகாப்பு அதிகாரி நவீன் மூஸா முதல்வருடன் கூடவே சென்றாலும், அவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது காவல்துறையினருக்கோ அல்லது உள்துறைக்கோ இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இதேபோல், சமூக வலைதளப் பொறுப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பதவிகளுக்கான அரசாணைகளும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

நீதிமன்ற அச்சமா? அல்லது நட்பு வட்டாரப் பாசமா?:

சட்டப்படி தகுதி உள்ளவர்களுக்கு யார் வேண்டுமானாலும் அரசுப் பணி வழங்கலாம் என்றாலும், இவற்றை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம்:

“விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட விவகாரத்தில், இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேபோல, இந்த நட்பு வட்டார நியமனங்களும் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் அரசாணை வெளியிடப்படாமல் மர்மம் காக்கப்படுகிறதா?” என்று அவர் சாடினார். த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், நெருங்கிய வட்டாரத்தினருக்கு மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டால், வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலை உணவுத் திட்ட நிதியும் சமூக நீதியும்:

அரசுப் பணி நியமனங்கள் மட்டுமின்றி, நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தியுள்ள அரசு, அதற்காகத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யாமல், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இதற்காகப் பயன்படுத்துவது சமூக நீதிக்கே சவாலானது என்று அவர் கூறினார். “எல்லோரும் உணவு அருந்துகிறார்கள்” என்று இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்புடையதல்ல என்றும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, த.வெ.க அரசின் நிர்வாகம் ஒரு மாயாஜாலக் கதை போலச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு: முதல் சுற்றில் 28,979 மாணவர்கள் சேர்க்கை; இன்று 2-வது சுற்று தொடக்கம்!

MUST READ