Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்.எல்.சி பங்கு விற்பனை: அரசு அந்தஸ்தில் மாற்றமில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல - எம்பி...

என்.எல்.சி பங்கு விற்பனை: அரசு அந்தஸ்தில் மாற்றமில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

-

- Advertisement -

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், விற்கப்பட்ட பங்குகளை அரசு உடனடியாக மீண்டும் மீட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

என்.எல்.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடந்த ஜூலை 6-ஆம் தேதி விளக்கம் அளித்து கடிதம் எழுதியிருந்தார். அந்த விளக்கமும், அதற்கு எம்பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள பதிலறிக்கையின் விவரங்களும் பின்வருமாறு:

மத்திய அமைச்சரின் விளக்கம் என்ன?:

மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அனுப்பிய பதிலில் குறிப்பிட்டிருப்பதாவது: என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசின் மிக முக்கியப் பொதுத்துறை நிறுவனமாகவே தொடரும். மேற்கொள்ளப்பட்டுள்ள 3 சதவீத பங்கு விற்பனை என்பது நிறுவனத்தின் அடிப்படைத் தன்மையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அரசின் வசம் 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் தொடர்வதால், நிறுவனத்தின் உடமை மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு ஆகியவை மத்திய அரசின் வசமே பாதுகாப்பாக இருக்கும்.

தனியார் மயத்தின் முதற்படியே பங்கு விற்பனை – சு.வெங்கடேசன் தாக்கு!:

அமைச்சரின் இந்த விளக்கத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், பங்கு விற்பனை என்பது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நோக்கத்தின் முதற்படி மட்டுமே என்று குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆட்சிக் காலத்தில் கேந்திர விற்பனை, தனியார் மயம், பங்கு விற்பனை ஆகிய மூவகை உத்திகள் மூலம் அரசு நிறுவனங்கள் தனியார் உடமைக்கு மாற்றப்படும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் இன்று ஒரு அரசு நிறுவனம்கூட இல்லாத நிலையை உருவாக்கிய அனுபவமே அரசின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளப் போதுமானது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எம்பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள முக்கியக் கோரிக்கை:

“என்.எல்.சி நிறுவனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு விற்ற பங்குகளை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என்ற என்.எல்.சி தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு உடனடியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.” பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் தொழிலாளர் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை!

MUST READ