காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது, “தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?” என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? “எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா? “எதற்கு தமிழ்?” என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? மு.க.ஸ்டாலின் TNPSCGroup2, கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே. இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, “வாங்கியதை” எல்லாம் “திருப்பி கொடுக்காமல்” இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை.
“3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்” என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும்” என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…



