நாம் தமிழர் கட்சியின் கே.வி.குப்பம் ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளது, அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் பேசியதாவது:- நாம் தமிழர் கட்சியில் இருந்து தாங்கள் விலகுவதற்கான காரணம் அடிமட்ட தொண்டர்களையும், பொறுப்பாளர்களையும் தலைவரை சந்திக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். ஆகவே நாங்கள் ஒட்டுமொத்தமாக விலகுகிறோம். ஒரு நல்ல தலைவர் வேண்டும். அவர் பின்னால் அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சீமான் பின்னால் இதுவரை பயணித்து வந்தோம்.
ஆனால் தற்போது அடிமட்ட தொண்டர்களையும், அடிமட்ட பொறுப்பாளர்களையும் சந்திக்காமல் தலைவர் இருந்து வருகிறார். அதுபோன்று அவரை சந்திக்க விடாமல் கட்சியின் இடைத்தரர்கள் சிலர் பொறுப்பாளர் என்ற போர்வையில் செயல்பட்டு வருகிறார்கள். ஆகவே நாங்கள் ஒட்டு மொத்தமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்த விலகிய கே.வி.குப்பம் ஒன்றிய பெண்கள் பாசறை செயலாளர் சாந்தி பழனி பேசியதாவது : – சீமான் ஒரு நல்ல தலைவராக இருப்பார், அடித்தட்டு மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு அரசியல் முன்னேற்றத்தையும் அவரால் காண முடியவில்லை. அவரை நம்பி இருக்கின்ற எங்களால் அடுத்த நகர்விற்கு அரசியல் பொறுப்பிற்கு எங்களால் வர இயலவில்லை. மேலும் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்களின் எண்ணத்தை எல்லாம் அவர் பின்னுக்கு தள்ளிவிட்டார்.
நாங்கள் விலகியவுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தம்பி விஜயின் தலைமையில் பணியாற்ற முடிவு எடுத்துள்ளோம். எங்களுடன் சேர்ந்து எங்கள் பகுதி பெண்கள் பாசறை சேர்ந்தவர்களையும் பொதுமக்களையும் பெண்களையும் இணைக்க முடிவு எடுத்துள்ளோம். அவருடைய மிக உயர்ந்த நிலையில் இருந்து எல்லாவற்றையும் இழந்து விட்டு மக்களுக்காக பணியாற்றுவேன். உங்கள் குடும்பத்தில் எது நடந்தாலும், நான் அங்கு ஓடி வருவேன் என்று கூறி இருக்கின்ற அந்த பேச்சும் எங்களுக்கு பிடித்திருக்கிறது. ஆகவே நாங்கள் தொடர்ந்து த.வெ.க வில் பணியாற்றுவோம் என்று கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.