கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியானது நகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிற இடத்தில் இப்பகுதியானது அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாராயம் விற்பனை படு ஜோராக நடைபெற்று வந்துள்ளது. கருணாபுரம் குடியிருப்பு பகுதியில் மையப் பகுதியில் அதிகளவில் வீடுகள் இருக்கும் இடத்தில் தனியாக மூன்று இடங்களில் வீடுகள் வைத்துக் கொண்டு ஒரு இடத்தில் புதுச்சேரி மற்றும் கல்வராயன் மலையில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை பதுக்கி வைப்பதற்காகவும், மற்றொரு வீட்டில் சாராயத்தை பாக்கெட் போட்டு வைத்து அதனை மற்றொரு வீட்டில் விற்பனைக்காக கொண்டு சென்று கருணாபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் கூலி தொழிலாளிகள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளிகள் என்பதால் வேலைக்கு சென்று திரும்பிய களைப்பில் சாராயம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது விஷ சாராயம் குடித்து 42 பேர் பலியானதை அடுத்து இந்த 3 வீடுகளும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. வீட்டில் இருந்த சாராயம் கலப்பு இயந்திரங்கள் மற்றும் முக்கிய ரசாயன கலவைகளை இரவோடு இரவாக எடுத்து கொண்டு கும்பல் தப்பி சென்றுள்ள நிலையில், தற்போது அந்த இடத்தை தற்போது காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கோவிந்தராஜன் என்ற கன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் ஆகியோர் கடந்த 2 வருடங்களாக அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பாக்கெட் ரூ.40, ரூ.50, ரூ.60 வரை விற்கப்பட்டுள்ளது. ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கன்னுக்குட்டி சாராயத்தை விற்பனை செய்ததால் விவகாரம் வெளியே தெரியாமலேயே இருந்துள்ளது. இதற்காக கருணாபுரத்தில் தெருவுக்கு ஒரு ஏஜென்ட் பிடித்து பாக்கெட் சாராயத்தை விற்றதும் தெரியவந்துள்ளது.
70 வழக்கில் தொடர்புடைய வியாபாரி சின்னத்துரை மாயமாகியுள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவர்தான் சாராய விற்பனையில் மொத்த வியாபாரியாக செயல்பட்டுள்ளார். அவருக்கு துணையாக இருந்த 10 பேரும் மாயமாகிவிட்டனர். மேலும் சின்னத்துரையிடம் 20க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாராய பாக்கெட்களை வாங்கி சென்று கருணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் யார், யார் என்கிற பட்டியலையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.இவர் மீது ஏற்கனவே 70 வழக்குகள் உள்ளன. விஷ சாராயத்திற்கு பலரும் பலியானது தெரிந்தவுடன் மாயமான சின்னத்துரையை பிடிப்பதற்கு சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.