மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது.
மாநில அளவிலான இரண்டாவது வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் (திமுக) ஆ.ராசா, எஸ்.எஸ். பழனி மாணிக்கம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள்(திமுக) விஜி ராஜேந்திரன், மருத்துவர் எழிலன், நீலமேகம், பூமிநாதன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, அரசுத்துறை செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தொகுதி மேம்பாட்டு நிதி,
இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய கருத்துரு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூபாய் ஐந்து கோடி நிதிமூலம் ஊரகப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிதியை முறையாக பயன்படுத்தி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். மேலும் தேசிய நல்வாழ்வு குழுமம் தரமான மருத்துவ சேவையை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே நோக்கம்.
கடுமையாக ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை என்று இருந்தது தற்போது மூன்று முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குடியிருப்பு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது. இத்திட்டம் அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்தில் உதவி புரியும். ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிகளில் சமமான வளர்ச்சியே சமூக நீதியும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கிடும் என்று முதல்வர் பேசினார்.