2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 95.20% தேர்ச்சி விகிதத்துடன் மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.


2025-2026 கல்வியாண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளங்கள் வாயிலாகவும் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர்.
இந்தாண்டு மொத்தம் 7,91,654 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 7,53,694 பேர் தேர்ச்சி பெற்று 95.20 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும் கன்னியாகுமரி 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்களும் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், 85.92 சதவீத தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. ராணிப்பெட், கிருஷ்ணகிரி, அரயலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களும் கடைசி ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
பள்ளிவாரியாக பார்க்கும்போது, மொத்தமுள்ள 7,536 மேல்நிலைப் பள்ளிகளில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல், 489 அரசு பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை 1,572 பள்ளிகள் பதிவு செய்துள்ளன.
பள்ளி வகைகளின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் 98.72 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளன. பெண்கள் பள்ளிகள் 97.08 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.16 சதவீதமாகவும், ஆண்கள் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.49 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
பாடவாரியாக கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து உயிரியல் 99.49%, கணிதம் 99.12%, இயற்பியல் 98.87%, வேதியல் 98.82%, தாவரவியல் 98.62%, கணக்கு பதிவியல் 98.04%, வரலாறு 97.90%, வணிகவியல் 97.55% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கவனம் ஈர்த்துள்ளது. தமிழில் 83 பேர், ஆங்கிலத்தில் 21 பேர், இயற்பியலில் 105 பேர், வேதியலில் 632 பேர், உயிரியல் பாடத்தில் 784 பேர், கணிதத்தில் 732 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், கணினிப் பயன்பாடுகளில் 2,099 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 463 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், +2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 13ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் மே 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைப் பொதுத்தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தவெக தலைவர் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் – ஆளுநருக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
