செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையோரம் நின்ற சரக்கும் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை புக்கத்துறை கூட்டு சாலை பகுதியில் விழுப்புரத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று பழுதாகி சாலை ஓரத்தில் நின்றுள்ளது. அந்த நேரம் திருச்சிலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்து நடந்த சில வினாடியில் கிளாம்பாக்கத்திலிருந்து இருந்து வந்த அரசு பேருந்து விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து மீது மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கோர விபத்தால் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்திலிருந்து படுகாயமடைந்தவர்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர சம்பவத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.