சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மண்ணடியில் நடைபெற்றது.
“மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்” என்ற தலைப்பில் துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாவட்டச் செயலாளர் – அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட, பகுதி, வட்டக்கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “நம்மையெல்லாம் திராவிட உலைக்கலனில் உருவாக்கி உள்ளனர். அந்த உலைக்கலனை இயக்கியவர்கள் தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் அவருக்கு தோளோடு தோள் நின்ற பேராசிரியர் ஆகியோர். இன்றைக்கு பேராசிரியர் இருந்திருந்தால் அவரும் நம்மோடு இந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து இருப்பார். ஆனால் அந்த வாய்ப்பு ஏற்படாமல் போய்விட்டது. இருந்தாலும் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவை யாரும் எதிர்பார்க்காத வகையில் நடத்திக் காட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அதில் அவருடைய அர்ப்பணிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்று சொன்னால், பேராசிரியரின் உருவச்சிலையை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அவரே பார்வையிட்டு அதன் நேர்த்தியை உறுதி செய்துவிட்டு வந்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த வகையில் நானும், பேராசிரியர் அவர்களிடம் அரசியல் பாடம் படித்த மாணவர்களில் நானும் ஒருவன் என்ற வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது.
கலைஞர் உருவாக்கிய எண்ணற்ற நல்ல திட்டங்களை அதிமுக அரசு கடந்த காலங்களில் ரத்து செய்துள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு அவர்களது ஆட்சி அமைந்த பின்னர், முதல் கூட்டத்தொடரிலேயே சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக அம்மையார் ஜெயலலிதா அரசு மசோதா கொண்டு வந்தது. அதனை அறிமுக உரையிலேயே எதிர்க்க வேண்டும் என நான் சொன்னேன். அதை அறிமுக நிலையிலேயே எதிர்த்தவர் நம்முடைய முதலமைச்சர். அந்த சமச்சீர் கல்வியை உருவாக்கிய பெருமை கலைஞருக்கு உண்டு என்று சொன்னால், அதற்கு கருவியாக இருந்த பெருமை எனக்கு உண்டு என்று சொன்னால், அந்த சமச்சீர் கல்வியின் உருவம் எப்படி இருக்க வேண்டும் என்றும், அது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும் உறுதி செய்தவர் பேராசிரியர் தான்.
அன்றைக்கு எத்தனையோ மாலை நேரங்களில் இரவு நேரங்களில் பேராசிரியர் அவர்களிடம் பேசி இருக்கிறேன். அன்றைக்கு 10ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் வந்தன என்று சொன்னால், ஒவ்வொரு புத்தகங்களிலும் இருக்கக்கூடிய அனைத்து வரிகளையும் முழுமையாக படித்தவர் நான் கூட இல்லை. இனமான பேராசிரியர் தான். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வியை செதுக்கித் தந்து அது சிறப்பாக வர முனைப்பு காட்டியவர் பேராசிரியர். பேராசிரியர் அவர்களிடம் கொடுத்தவாக்கின்படி, சட்டப்போராட்டம் நடத்தி சிறப்பான முறையில் சமச்சீர் கல்வியை செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் நம்முடைய இன்றைய முதலமைச்சர். குறிப்பாக அன்றைக்கு எந்த முதலமைச்சர் இந்த சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக சொன்னாரோ, அதே முதலமைச்சரே சமச்சீர் கல்வியை செயல்படுத்துவோம் என சட்டமன்றத்தில் அறிவிக்கும் வகையில் செய்து காட்டியவர் நம்முடைய முதலமைச்சர். அத்தகைய சமச்சீர் கல்வியை உருவாக்கித் தந்தவர் நம்முடைய பேராசிரியர். அவருக்கு இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர், இத்தனை பெரிய சிறப்புச் செய்துள்ளார். அவரது வழியில் இன்றைக்கு திராவிட மாடல் அரசு அச்சுப்பிசறாமல் செயல்பட்டு வருகிறது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பேராசிரியரின் பெருமைகள் எண்ணற்றவை இருந்தாலும், அவரிடத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருப்பது, எத்தனையோ சோதனைகள், இன்னல்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை இந்த இயக்கம் சந்தித்த போதும், தடம் மாறாத உடன்பிறப்பாக தலைவர் கலைஞர் அவர்களுடன் தோளோடு தோள் நின்றாரே பேராசிரியர், அதுதான் அவரது பெருமைகளை இன்றைக்கும் நம்மை பேச வைக்கிறது” எனக் கூறினார்.