
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கவுள்ளன.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (நவ.04) முதல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கவுள்ளன.
இதற்கு , முன்பாக திருத்த நடவடிக்கைகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்றது. இதில், கணக்கீட்டுப் படிவங்களை அச்சிடும் பணியும், வாக்காளர் பதிவு அலுவலர்கள் (EROs), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AEROs), வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் (BLO Supervisors) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் பணிகளும் நடைபெறும் நடைபெற்றது. மேலும் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கருத்துக்கள் கேட்கப்பட்டது

இதனைத்தொடர்ந்து, வீடு தோறும் கணக்கீடு செய்யும் பணி நாளை முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பார்கள். அப்போது, அங்கு இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள்.எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்லுவார்.
மேலும், தற்போதைய வாக்காளர்களுக்கு இணையதளம் வழியாக (Online) முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றும் வசதியும் வழங்கப்படும்.அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். இதன்படி மொத்தம் 77, 000 அலுவலர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள்முதல் ஜனவரி 8ம் தேதிவரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும்.


