நிர்மலா சீதாராமன் எழுதி ஒப்புவித்த இந்தப் பட்ஜெட் நமக்கானது அல்ல. அதானி அம்பானிக்கும்மானது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேதுகருணாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ஒன்றிய பட்ஜெட். ஆகா. அது இனிப்பு போல தெரியும். ஆனால் அது கசப்பை விட மோசமான கசப்பு. இந்தப் பட்ஜெட்டில் வடிகிற தேனை சிந்தாமல் சிதறாமல் பருகி, சில ஊடகங்கள் எல்லாம் பரவசப்படுகிறது.

சூது,வாதின் மொத்த சூட்சமத்தையும் மோடி அரசு கற்று வைத்திருக்கிறது என்பதை எளிய மக்கள் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனால் மக்களிடம் செய்தியை பரப்பும் சில ஊடகங்கள். அவர்களை தாண்டி தேனை தடவி பட்ஜெட்டை பரப்புகிறது.
பழுத்த பலாப்பழத்தின் தோலில் மேலே முள்ளாக இருக்கும் கீறினால் உள்ளே இனிப்பான பலாப்பழச் சுளை கிடைக்கும். இந்த பட்ஜெட் பலாப்பழத்தில் பார்த்த உடனே முள் இல்லாமல் இருக்கிறதே என்று நினைத்தால் கீறிய உடந்தான் தெரிகிறது. உள்ளே இருக்கும் அனைத்தும் பலாப் பழ சுளைகளிலும் முள் முளைத்திருக்கிறது என்று. இனிப்புதான் ஆனால். தொண்டையில் சிக்கும் போதும்தான் தெரிகிறது வலி.
நமக்கு அனைத்திலும் வரிச்சலுகை, வரிச்சலுகை என்று இனிப்பான கசப்பை தந்து விட்டு அம்பானிக்கும், அதானிக்கும் இனிப்பான கூடுதல் இனிப்பை கொடுத்திருப்பதுதான் இந்தப் பட்ஜெட். இது நமக்கான பட்ஜெட் அல்ல! அம்பானிக்கும் அதானிக்குமானது!
வார்த்தை ஜாலங்களில், வகை வகையான பொய்களை அடுக்குவதில் உலகிலேயே முதன்மையானவர் நிர்மலா சீதாராமன் என்பதை உலகம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். எனக்கு தெரிந்து இப்படி ஒரு நடிக நாட்டரசியை நான் காணவே இல்லை.
இந்த நுண்ணரசியல் நுட்பத்தை பா.ஜ.க. எப்போதும் செய்யும் ஆனால் கண்டறிவது கடினம்.
நிர்மலா சீதாராமன் எழுதி ஒப்புவித்த இந்தப் பட்ஜெட்டின் ஒவ்வொரு பகுதிகளும் அதன் உள் நோக்கங்களும் இந்திய மக்களின் முதல் எதிரி. அவ்வளவு பித்தலாட்டம்.
இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. யாருக்கானவர்கள்? என்பதை அனைவரும் அறிவர்! அதானி, அம்பானிகளுக்காகவே இந்த ஆட்சி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் சொல்லமாட்டார்கள். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் சூசகமாக பொய்யும் புளுகுமாக ஒப்புவித்தார் நிர்மலா சீதாராமன்.
தற்சார்பை பற்றி பேசுகிறார்கள். கேட்கும் போது இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே. ஆனால், உண்மை என்ன? சுதேசி தொழில்களை சூறையாடி, அதானி அம்பானி தொழிற்சாலைகளை விருட்சமாக வளர்த்தெடுப்பதே அவர்களின் திட்டம் என்பதை புரிந்தோர் அறிவர்!
இந்தியாவின் அத்தனை சிறு, குறுந் தொழில்களையும் ஒடுக்கி ஓரங்கட்டிவிட்டு அந்நிய தொழில்களை அதே வண்ணத்தில் இறக்குமதி செய்தீர்களே மறக்கமுடியுமா. இனியும் அதே தொடரும் என்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள். இந்த லட்சணத்தில் தற்சார்பு பொருளாதாரம் பேசுகிறீர்கள்! வெட்கம்! சிரிப்புதான் வருகிறது.
இன்னொன்று அதிர்ச்சியாய் இருந்தது இந்தப் பட்ஜெட்டில் அரிய வகை காந்தங்களுக்கான கனிம வளம் நிறைந்த ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடங்களை அமைப்பர்களாம்.
அய்யோ! இனி மலைகள், இயற்கை வெளிகள் எல்லாம் எல்லாம் சூறையாடல்தான்! குவாரி முதலாளிகளின் சவாரிக்கு வழித் தடங்களை அமைக்கிறோம் என வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே. ஏன் இந்த வார்த்தை வர்ணிப்புகள். ஏற்கெனவே, எல்லாம் களவாடப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இனி என்ன வளம் இருக்கிறது. கட்டியிருக்கும் கோவணம்தான் பாக்கி. அதுவும் அடுத்த பட்ஜெட்டில் உருவிவிடுவார் மோடி.
தற்சார்பு தொழில்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக அழித்து தன்னிறைவான வாழ்க்கை முறைமைகளை தரைமட்டமாக்கி, கார்ப்பரேட் பெரு முதலாளிகள் கொலுத்து வாழ்வதற்கு, அதற்காகவே ஆட்சி அமைத்து இந்திய மக்களை இருட்டுக்குள் அடைத்து வைக்கும் இயல்பான பா.ஜ.க.வின் சிந்தனையை. பட்ஜெட் என்று நாம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் பொய்யான வெளிப்படை.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய எந்த நிதியும் இல்லை. செயலாற்ற கூடிய எந்த திட்டமும் இல்லை. ஆனால் வரிச்சலுகை, வரிச்சலுகை என்று வாய்ச்சவுடால், வித்தைக்கு குறைவே இல்லை.
ஜனநாயகம் மெல்ல மெல்ல வரிச்சுமையால் சாகுறது. பணநாயகம் அந்நிய பெருமுதலைகளின் வாய்களுக்கு வேகமாக பாய்கிறது. இந்த பட்ஜெட் இந்திய மக்களுக்கானது அல்ல! பெருமுதலாளிகளுக்கானது” என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேதுகருணாஸ் தெரிவித்துள்ளாா்.
5 மாதத்திற்கு பிறகு நூல் விலை அதிகரிப்பு… கிலோவுக்கு ரூ.7 உயர்வு…


