ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே அதிர்ச்சி. ஐந்து மாதத்திற்கு பிறகு நூல் விலை கிலோவிற்கு ரூ.7 உயர்ந்துள்ளது.
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம்.

நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்து ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 மாதங்கள் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலை சீராக இருந்து வந்தது.
இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை, நூற்பாலைகள் இன்று அறிவித்தது. அதன்படி அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவிற்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரிவிதிப்பை கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நீக்கி இருந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த நீட்டிப்பு முடிவடைந்ததால், நூல் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருந்தது இருப்பினும் இறக்குமதி வரி தற்போது வரை வசூலிக்கப்படாமல் இருக்கிறது இருப்பினும் நூல் விலை உயர்ந்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அடுத்த நாளே இன்று நூல் விலையில் 7 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது தொழில்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய மாதத்திற்கான புதிய அறிவிப்பின்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.190, 16-ம் நம்பர் ரூ.200, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.258, 24-ம் நம்பர் ரூ.270, 30-ம் நம்பர் ரூ.280, 34-ம் நம்பர் ரூ.300, 40-ம் நம்பர் ரூ.318, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.255, 24-ம் நம்பர் ரூ. 263, 30-ம் நம்பர் ரூ.276, 34-ம் நம்பர் ரூ. 289, 40-ம் நம்பர் ரூ.308-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனா்.


