Homeசெய்திகள்மாவட்டம்ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு...

ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

-

- Advertisement -

‘நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்’ என மனைவியிடம் உருக்கம்: நிதி நிறுவனம் மீது போலிஸில் புகார்!

ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் முறையற்ற நெருக்கடியால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கடன் தொகையும் மாதத் தவணை தாமதமும்
தேவசானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இராமச்சந்திரன் (39). இவருக்கு அஞ்சலி (30) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். குடும்பத் தேவைக்காக ஓசூரில் இயங்கி வரும் ‘வெரிடாஸ் பைனான்ஸ்’ (Veritas Finance) என்ற தனியார் நிதி நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது விளைநிலத்தை ஈடுவைத்து 14 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாதந்தோறும் தவறாமல் தவணைத் தொகையைச் செலுத்தி வந்த நிலையில், கடந்த 4 மாதங்களாகச் சரியான தேதியில் கட்ட முடியாமல் சற்று தாமதமாகச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டின் முன்பாகவே அமர்ந்து நெருக்கடி
இந்த மாதத்திற்கான தவணைத் தொகை செலுத்தப்படவில்லை எனக் கூறி, கடந்த ஜூலை 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களிலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் அதிகாலை முதல் இரவு வரை இராமச்சந்திரனின் வீட்டின் முன்பாகவே அமர்ந்துள்ளனர். அக்கம் பக்கத்தினரும் ஊர் பொதுமக்களும் இதைப் பற்றி விசாரித்ததால், ஊராரின் பார்வையில் இராமச்சந்திரன் கடும் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.

உருக்கமான பேச்சும் தற்கொலை முடிவும்
நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று தவணைத் தொகையை இராமச்சந்திரன் செலுத்திய போதிலும், அவமானத்தால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சலில் இருந்து அவரால் மீள முடியவில்லை. அப்போது தனது மனைவியிடம், “நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று உருக்கமாகக் கூறிவிட்டுத் தூங்குவதற்காக அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டுள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளிருந்து எந்தச் சத்தமும் வராததால் சந்தேகமடைந்த மனைவி அஞ்சலி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கூரைக் கம்பியில் கயிற்றால் தூக்கிட்டு இராமச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் மனைவி புகார் – விசாரணை தீவிரமாக்கம்
தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் தொடர் தொல்லை, அத்துமீறல் மற்றும் முறையற்ற நெருக்கடியே தனது கணவரின் தற்கொலைக்குக் காரணம் எனக் கூறி, உயிரிழந்த இராமச்சந்திரனின் மனைவி அஞ்சலி கிராம மக்களுடன் சென்று உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கெடுபிடியால் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் பரபரப்பு! குற்றாலம் மெயின் அருவியில் பேரிகார்ட் சரிந்து விபத்து – பயணிகள் காயமடைந்ததால் பதற்றம்!

MUST READ