’24 புண்ணிய தீர்த்தங்களின் அடையாளமா?’ – தொன்மைச் சின்னங்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வலியுறுத்தல்!
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், திடீரென சுமார் 80 அடி தூரத்திற்குப் பின்வாங்கிய கடல் நீரால், அங்கிருந்த புராண முக்கியத்துவம் வாய்ந்த பழங்காலக் கல்வெட்டு வெளிப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பக்தர்களிடையேயும் தொல்லியல் ஆர்வலர்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடல் உள்வாங்குதலும் பாறைகள் வெளிப்படுவதும்:
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை தந்து கடலில் நீராடி, நாழிக்கிணற்றில் புனித நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடலில் சிறு மாறுபாடுகள் ஏற்படுவது வழக்கமானதுதான் என்றாலும், இன்று காலை மேகமூட்டமான சூழலில் சுமார் 80 அடி தூரம் வரை கடல் நீர் திடீரென உள்வாங்கியது.

நாழிக்கிணறு எதிர்ப்பகுதியில் தொடங்கி சந்தோஷ மண்டபம் வரையிலான பகுதியில் கடல் நீர் பின்வாங்கியதால், பச்சை நிறப் பாசி படர்ந்த பழமையான பாறைகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அந்தப் பாறைகளில் அமர்ந்து நீராடியதுடன், பாறை இடுக்குகளில் இருந்த சிறிய வகை சங்குகள் மற்றும் சிப்பிகளைச் சேகரித்தனர்.

வெளிவந்த புராதன கல்வெட்டு
திருச்செந்தூர் முருகன் கோயிலின் வள்ளி குகை முதல் மூவர் சமாதி வரை மொத்தம் 24 புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக ஆன்மீக வரலாறுகள் கூறுகின்றன. பழங்காலத்தில் இந்தத் தீர்த்தங்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், காலப்போக்கில் கடல் நீர்மட்டம் உயர்ந்து அவை கடலுக்குள் மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கடல் 80 அடி வரை உள்வாங்கியதன் காரணமாக, கரையோரம் புதைந்திருந்த புராணச் சிறப்புமிக்க அந்தப் பழங்காலக் கல்வெட்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடலில் நீராடிய பக்தர்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து, தங்களது கைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.
பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்செந்தூர் திருக்கோயிலின் தொன்மையான ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கும் இந்த புராதன கல்வெட்டுகள் மற்றும் தீர்த்த அடையாளங்களை, கோயில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக தலையிட்டுப் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இவற்றை உரிய முறையில் ஆவணப்படுத்திப் பராமரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!
