தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கைப் பலகைகளை வைக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சடங்குகள் என்ற பெயரில் மாசுபாடு
தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, “இறந்தவர்களுக்கான காரியங்கள் மற்றும் பரிகாரச் சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் பழைய ஆடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற பொருட்களை வீசி எறிந்து ஆற்றை மாசுபடுத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.”
மாவட்ட நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவு
ஆற்றின் இயற்கை வளத்தையும், தூய்மையையும் பாதுகாக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கித் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் படித்துறைகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில். “ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பளிச்செனத் தெரியும்படி எச்சரிக்கைப் பலகைகளைப் (Warning boards) பல இடங்களில் உடனடியாக வைக்க வேண்டும் என்றும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் இந்த உத்தரவைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தித் தாமிரபரணி ஆற்றின் புனிதத்தையும் தூய்மையையும் காப்பாற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

