நெல்லை மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனர்.
அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழையக் காவல்துறையினர் தடை விதித்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டத்திற்கான பின்னணி
நெல்லை மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், மானூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களும் ஊர் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர்.
காவல்துறையினர் தடுத்து நிறுத்ததால் தள்ளுமுள்ளு
ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல முயன்ற பொதுமக்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனக் கூறி ஆவேசமடைந்த பொதுமக்கள், தாங்கள் கொண்டுவந்திருந்த அடையாள அட்டைகளைச் சாலையில் வீசி எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, பொதுமக்களைச் சமாதானப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் தரப்பிலிருந்து “நாடகம் ஆட வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், வாக்குவாதம் மேலும் உச்சக்கட்டத்திற்குச் சென்றது.
சாலை மறியல் மற்றும் தர்ணா
மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தங்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
சாதிய ரீதியான அடக்குமுறை குற்றச்சாட்டு
இச்சம்பவம் குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதுபோன்ற அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாகக் கையாளுகின்றன.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரிய எங்களது குரலை ஒடுக்க, சாதிய ரீதியான அடக்குமுறைகளைத் திட்டப்பூர்வமாகத் திணித்து வருகின்றனர்” என்று அப்பகுதி மக்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் கடுமையான வாதங்களுக்குப் பிறகு, காவல்துறையினர் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதித்தனர்.
கோயில் நில விவகாரம் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் தற்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
