திருவள்ளூர் அருகே கந்துவட்டி கொடுமை மற்றும் கொலை மிரட்டல் காரணமாகத் தனியார் நிறுவன ஊழியர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத்குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் சத்தியமூர்த்தி (45). இவர் மீஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்பவருடன் திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கந்துவட்டிக்காகக் கொடுக்கப்பட்ட தொகையைக் கேட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. பணத்தை உடனே திருப்பித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சத்தியமூர்த்தி, தான் இறந்துபோவதாகத் தனது தாய்க்குச் செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
மருத்துவமனையில் பரிதாப சாவு
தகவலறிந்து உடனடியாக உறவினர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சத்தியமூர்த்தி மூச்சுப்பேச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆட்டோ மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மனைவி அளித்த பகீர் புகார்
கந்துவட்டி கொடுத்துக் கணவரை மிரட்டிச் சாவிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சத்தியமூர்த்தியின் மனைவி மகேஸ்வரி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன், அவரது கூட்டாளிகள் ராமு, ரஞ்சித் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
கந்துவட்டி கொடுமையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மப்டியில் நின்ற எஸ்.ஐ.யை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ்: விபசார கும்பல் கைது!
