ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், போலி ரசீது புத்தகங்களை அச்சிட்டுப் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர் உட்பட 5 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திடீர் ஆய்வில் அம்பலமான மோசடி
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி மன்ற தீர்மானம் எதுவுமின்றி 2 இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வந்துள்ளன.

இதில் நகராட்சியின் அசல் ரூ.20/- ரசீது போலவே போலி ரசீதுகளை அச்சிட்டுப் பணத்தை வசூலிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 22.09.2026 அன்று மதியம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (V&AC) அதிகாரிகள், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் திருமதி.மீன லோசணி மற்றும் ஆய்வுக்குழு ஆய்வாளர் திரு.சேதுபதி ஆகியோர் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வாகன நிறுத்துமிடம்-1ல் துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் போலி ரசீதுகள் மூலம் பணம் வசூலிப்பதும், வருவாய் உதவியாளர் மாரிமுத்து அதை மேற்பார்வையிடுவதும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கம்
சோதனையின் போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள்:
வாகன நிறுத்துமிடத்தில்: ரூ.20/- மதிப்புள்ள 19 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத ரொக்கம் ரூ.12,750/-.
மாரிமுத்து வீட்டில் நடைபெற்ற சோதனையில்: கணக்கில் வராத ரொக்கம் ரூ.23,500/- மற்றும் போலி ரசீதுகள்.
மொத்தம் கைப்பற்றப்பட்ட தொகை: ரூ. 36,250/-.
52 போலி ரசீது புத்தகங்கள் அச்சிட்டு மோசடி
விசாரணையில், ஜோசப் ஜெயராஜன் என்பவருக்குச் சொந்தமான அச்சகத்தில் (Press), ஒரு புத்தகத்திற்கு 100 ரசீதுகள் வீதம் மொத்தம் ரூ.1,04,000/- மதிப்பிலான 52 போலி ரசீது புத்தகங்கள் அச்சிடப்பட்டது தெரியவந்தது. இதில் 19 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 33 புத்தகங்களைக் கைப்பற்ற விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மேலும், நகராட்சி பணம் பெறும் அலுவலரின் வாக்குமூலத்தில், அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட 25 ரசீது புத்தகங்களில் ரூ.50,000/- வசூலிக்கப்பட்டு ரூ.48,000/- மட்டுமே கணக்கில் செலுத்தப்பட்டதும், 300 அசல் ரசீது புத்தகங்களுக்கு இருப்பு பதிவேடு (Stock Register) எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 5 பேர் விவரம்:
ரமேஷ் (36): வருவாய் ஆய்வாளர்
மாரிமுத்து (38): வருவாய் உதவியாளர்
ரிஷி கேசவன் (47): வருவாய் உதவியாளர்
ஆனந்தன் (55): துப்புரவு மேற்பார்வையாளர்
ஜோசப் ஜெயராஜன் (68): அச்சக உரிமையாளர்
15 நாட்கள் நீதிமன்றக் காவல்
கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி திரு. மணி அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முசிறி அருகே விபத்து: அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் மீது வேன் மோதியதில் 9 மாணவர்கள் காயம்!
