Homeசெய்திகள்மாவட்டம்இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: கன்னியாகுமரியில் 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – போலீசார், இளம்பெண்ணின்...

இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: கன்னியாகுமரியில் 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – போலீசார், இளம்பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதாக குடும்பத்தினர் புகார்

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணைக் காதலித்து வந்த 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: கன்னியாகுமரியில் 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – போலீசார், இளம்பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதாக குடும்பத்தினர் புகார்

இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் இரணியல் போலீசார் தொடர்ந்து மிரட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

we-r-hiring

மேலும், இளைஞரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய பழக்கம் காதலாக மாறியது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கட்டிமாங்கோடு, குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பண்டாரவளையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அருள்ராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த இளம்பெண், தன்னை உடனடியாக அழைத்துக்கொண்டு வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் கையை அறுத்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இளம்பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞர்

இளம்பெண்ணின் மிரட்டலால் அச்சமடைந்த அருள்ராஜ், அவரை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம்பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக்கொண்டு இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்று மாலை இளம்பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு அருள்ராஜ் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த இளம்பெண்ணின் தாயார் அருள்ராஜை செல்போனில் தொடர்புகொண்டு கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், இளம்பெண்ணின் உறவுக்காரப் பெண் ஒருவர் வழக்கறிஞர் எனக் கூறி அருள்ராஜை மிரட்டியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற போலீசார்?

இதற்கிடையே, இளம்பெண்ணின் பெற்றோர் இரணியல் காவல் நிலையத்தில் அருள்ராஜ் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அருள்ராஜின் வீட்டிற்குச் சென்ற இரணியல் போலீசார், அவரது பெற்றோரிடம் மிரட்டும் வகையில் பேசியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வீட்டிலிருந்த சுமார் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான அருள்ராஜின் இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்துச் சென்றதாகவும், தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருள்ராஜ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவு

இந்தச் சூழலில், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்ராஜ் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அருள்ராஜ் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண்ணுடனான காதல் முறிந்ததால் ஏற்பட்ட அவமானம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

ஆனால், அருள்ராஜின் உறவினர்கள் இதனை மறுத்துள்ளனர். இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் இரணியல் போலீசார் தொடர்ந்து மிரட்டியதாலும், இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாலும் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, அருள்ராஜின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, அவரை மிரட்டியதாகக் கூறப்படும் இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோவை மலுமிச்சம்பட்டியில் குடியிருப்பு அருகே செயல்படும் கல்குவாரி கிரஷர்! மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

MUST READ