தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் மணல் குவாரி தொடர்புடைய 30 இடங்களில் இன்று காலை முதல் இந்தச் சோதனை நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ். ராமச்சந்திரன். இவரது நண்பரான திண்டுக்கல் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனின் உறவினரான குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் ஆகியோர் அரசு மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ராமச்சந்திரன், தவெக நிர்வாகி தொடர்புடைய இடங்களில் சோதனை
முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ராமச்சந்திரனின் ஆதரவாளராகக் கூறப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி குமாரராஜாவின் வீடு, அலுவலகம் மற்றும் மண்டபம் ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ள நிலையில், அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரிகாலன், அவரது பங்குதாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.
மேலும், கரிகாலனின் பங்குதாரர்களாகக் கூறப்படும் அரசு ஒப்பந்ததாரர் கர்ணனின் புதுக்கோட்டை நகராட்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர, மறவப்பட்டி பகுதியில் உள்ள மோகன்ராமின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை முடிவில் விவரங்கள் வெளியாகும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
