திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தயாரிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற பத்தமடைப் பாய், அதன் தனித்துவமான நெசவு முறைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தப் பாய்க்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.
இயற்கையாக விளையும் கோரைப்புற்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பத்தமடைப் பாய், தமிழகத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஆனால், சமீபகாலமாக மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பத்தமடைப் பாய்களின் விலையும் 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் பத்தமடையில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தொழில் படிப்படியாக நலிவடைந்துள்ளது.
தற்போது சுமார் 35 முதல் 50 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிலும் கைத்தறி மூலம் பாய் நெய்பவர்கள் 10-க்கும் குறைவானவர்களே உள்ளனர். பெரும்பாலானோர் விசைத்தறியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பத்தமடைப் பாயின் தனித்துவத்திற்குக் காரணம், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இயற்கையாக வளரும் கோரைப்புற்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதுதான்.
ஆனால், சமீபகாலமாக ஆற்றங்கரையோரப் பகுதிகளில் கோரைப்புற்களின் வரத்து குறைந்துள்ளதால், தஞ்சாவூர் மாவட்டம் காவிரிப் படுகையில் விவசாயிகளால் பயிரிடப்படும் கோரைப்புற்களை வாங்கி பாய் தயாரிக்கும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பாய் தயாரிப்பதற்காக முதலில் கோரைப்புற்கள் வெட்டப்பட்டு வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. பின்னர் அவை தண்ணீரில் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஊறவைக்கப்பட்டு, ரகத்திற்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றன.
தொடர்ந்து தேவையான வண்ணங்களில் சாயம் பூசப்பட்டு, கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் பாய்களாக நெய்யப்படுகின்றன. இதில் மிகவும் மெல்லியதாகத் தயாரிக்கப்படும் பாய், ‘பட்டுப் பாய்’ என அழைக்கப்படுகிறது. இதனைத் தயாரிப்பதற்காக கோரைப்புல் மிக நுணுக்கமாக இழைக்கப்பட்டு நெய்யப்படுகிறது.
ஒரு பட்டுப் பாயைத் தயாரிக்க சுமார் 45 நாட்கள் வரை ஆகும். இதன் விலை அதிகபட்சமாக ரூ.13,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், எல் நினோ காரணமாக ஏற்பட்ட வறட்சி உள்ளிட்ட காரணங்களால் கோரைப்புல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கோரைப்புல் பெரிய பண்டல் ரூ.1,300-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், சாயப்பொடி ஒரு கிலோ ரூ.900-ல் இருந்து ரூ.1,350 ஆகவும், நூல் விலை ரூ.160-ல் இருந்து ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இதனால் பாய் தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்கும் கூடுதல் கூலி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பு ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டுப் பாய் தற்போது ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக விசைத்தறி பாய்கள் ரூ.100 முதல் ரூ.550 வரையிலும், பட்டுப் பாய்கள் ரூ.1,700 முதல் ரூ.13,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப பத்தமடைப் பாய்களின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் அதிக விலை கொடுத்து பாய் வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விற்பனையும் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அதிக உழைப்பும் நீண்ட நாட்களும் தேவைப்படும் பட்டுப் பாய் தயாரிப்பில் போதிய வருமானம் கிடைக்காததால் பலரும் அந்தத் தொழிலைக் கைவிட்டுள்ளனர்.
தற்போது பத்தமடையில் இரண்டு பேர் மட்டுமே பட்டுப் பாய் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஐந்தாவது தலைமுறையாக பாய் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் செய்யது சுலைமான், சண்முகப்பிரியா, மகமத்துல்லா பானு உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் கூறுகையில், உலகப்புகழ் பெற்ற பத்தமடைப் பாய்க்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொடர்ந்து உற்பத்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பத்தமடைப் பாயின் பாரம்பரியத்தையும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு நலவாரியம் மூலம் ஊக்கத்தொகை உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும், மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
