Homeசெய்திகள்மாவட்டம்அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்டு விற்பனை செய்த தலைமை ஆசிரியை? – முசிறி...

அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்டு விற்பனை செய்த தலைமை ஆசிரியை? – முசிறி அருகே அதிர்ச்சி சம்பவம்!

-

- Advertisement -

பருவத் தேர்வு முடிந்ததும் மாணவர்களிடம் புத்தகங்களைப் பெற்று விற்றதாகப் புகார் – விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்டு விற்பனை செய்த தலைமை ஆசிரியை? – முசிறி அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களைப் பழைய பேப்பர் வியாபாரியிடம் எடைக்குப் போட்டு விற்பனை செய்ததாகப் பள்ளித் தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது.

we-r-hiring

தும்பலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முதல் பருவத்திற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியை மஞ்சுளா திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்தப் புத்தகங்களைப் பள்ளிக்கு ஆட்டோவில் பழைய இரும்பு மற்றும் பேப்பர் வாங்கும் வியாபாரிகளை வரவழைத்து எடைக்குப் போட்டு விற்பனை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதனை அந்த வழியாகச் சென்ற பெற்றோர் கவனித்து செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்குச் சென்ற செய்தியாளர்கள், பாடப்புத்தகங்கள் எடைக்குப் போடப்பட்டுக் கொண்டிருந்த காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளனர்.

அப்போது தலைமை ஆசிரியை மஞ்சுளா விளக்கம் அளிக்கத் தொடங்கியதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்றும், செய்தி வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், டெங்கு கொசுக்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவே புத்தகங்களை எடைக்குப் போட்டதாக அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும் மாணவர்களிடம் அரசு வழங்கிய இலவசப் பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெற்று எடைக்குப் போடுவதைத் தலைமை ஆசிரியை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு மாணவர்களின் கல்வி நலனுக்காக இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி அலுவலரிடம் கேட்டபோது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

MUST READ