Homeசெய்திகள்மாவட்டம்அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை ஏற்பு: தென்காசியில் அரசாணையை மீறி வெளியிடப்பட்ட ரூ.2.18 கோடி மதிப்பிலான 52...

அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை ஏற்பு: தென்காசியில் அரசாணையை மீறி வெளியிடப்பட்ட ரூ.2.18 கோடி மதிப்பிலான 52 டெண்டர்கள் அதிரடி ரத்து!

-

- Advertisement -

தென்காசி மாவட்டத்தில் அரசின் புதிய அரசாணைக்கு முரணாக வெளியிடப்பட்ட டெண்டர்களை எதிர்த்து அறப்போர் இயக்கம் விடுத்த கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.2.18 கோடி மதிப்பிலான 52 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அறப்போர்

we-r-hiring

அறப்போர் இயக்கத்தின் புகாரும் அரசின் நடவடிக்கையும்:

கடந்த ஜூன் 30 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட G.O.(Ms.) No.115 அரசாணையின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் (DRDA) பதிவு பெற்றுள்ள தகுதியான அனைத்து ஒப்பந்ததாரர்களும் அந்த மாவட்டம் முழுவதும் நடைபெறும் டெண்டர்களில் பங்கேற்க முழு உரிமை உண்டு. ஆனால், தென்காசி மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சில ஊராட்சி ஒன்றியங்களில், “அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும்” என்று விதிகளை மீறி கட்டுப்பாட்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இத்தகைய நிபந்தனைகள் போட்டியைத் தடுத்து, சிலருக்கு மட்டுமே ஆதாயம் தேடித்தரும் என்று சுட்டிக்காட்டி, அறப்போர் இயக்கம் கடந்த ஜூலை 21 அன்று முதலமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு விரிவான புகாரை அனுப்பியிருந்தது. அறப்போர் இயக்கத்தின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், உடனடியாகத் தலையிட்டுத் தங்களது டெண்டர்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது: கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்: 26 டெண்டர்கள் ரத்து, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்: 24 டெண்டர்கள் ரத்து, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்: 2 டெண்டர்கள் ரத்து, மொத்தம்: ரூ.2.18 கோடி மதிப்பிலான 52 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அறப்போர் இயக்கத்தின் வரவேற்பு மற்றும் அடுத்தகட்ட கோரிக்கை:

“அறப்போர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் G.O.(Ms.) No.115 அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ரத்து செய்யப்பட்ட இந்த 52 பணிகளுக்கும் அனைத்துத் தகுதியான ஒப்பந்ததாரர்களும் சமமாகப் பங்கேற்கும் வகையில் புதிய, சட்டபூர்வமான டெண்டர் அறிவிப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும்.” அரசாணை விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கிய விவகாரத்தில் அறப்போர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளமை, வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டியுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவிரி, மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

MUST READ