தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வங்க கடலில் கலக்கும் முக்கிய நதி பெண்ணையாறு. காவிரி நதிக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாக பெண்ணையாறு நதி கருதப்படுகிறது. காவிரி விவகாரத்தைப் போல பெண்ணையாறு நதிநீர் பங்கிட்டு தொடர்பாக தமிழகம்-கர்நாடகா இடையே நீண்ட கால பிரச்சனை உள்ளது. பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடகா அரசு விதிகளை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான பெண்ணையாறு விவகாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை குழுவை அமைக்குமாறு கடந்த 2024 ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு பேச்சுவார்த்தை குழுவையையும் அமைத்தது. மத்திய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு மத்திய நிர்வாக அமைச்சரத்தால் அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டம் கடந்த 2024 அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை! இது உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்து விட்டது. அதனால் இப்போது மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசு மீண்டும் ஒரு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தமிழ்நாடு கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் வாதம் முன் வைத்தனர். தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே உடன்பாடு காண மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழக அரசு பேச்சுவார்த்தை தேவையில்லை என்று கருதுவதாகவும், ஆனால் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என தெரிவித்தனர்.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 2018ம் ஆண்டிலிருந்து வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு இறங்கி வரவில்லை என தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நீர் பங்கீடு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுக்க மத்திய அரசு உதவுவதற்கு தயாராக இருந்தும் இரு மாநில அரசுகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி, வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஞ்சாரியா அமர்வு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் தீர்ப்பு வழங்கப்பட்ட இன்றைய தேதியில் இருந்து அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தென்பெண்ணையாறு நீர் விவகார தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் மத்திய அரசு இன்றைய நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை அமைத்து அது குறித்து அதிகாரப்பூர்வமாக அரசு இதழில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கியதோடு, நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்காமல் இருப்பதற்கான எந்த வித காரணத்தையும் எங்களால் காண முடியவில்லை என்றும் அதனாலயே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என ஆணை பிறப்பிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…


