பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பா.ம.க.)கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம், அன்புமணியின் முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்யவும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான கடிதத்தை தனது முகவரிக்கு அனுப்ப தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் கோரி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த கடிதத்தை ரத்து செய்யும் மனுவில், கடந்த 2025 மே மாதத்திலேயே அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கட்சித் தலைவராக தொடர்வதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அனுமதி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி, அன்புமணி கட்சியின் உரிமையை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து தகவல்களும் தனக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வாதிட்டுள்ளார். இதேபோல், டெல்லி உயர் நீதிமன்றத்தில், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்குவதாக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த சின்னம் முடக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜா, தங்களது வாதத்தையும் கேட்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தங்களை எதிர்தரப்பினராக இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்போது எதிர்தரப்பினராக இல்லாத நிலையில் அந்த கோரிக்கையை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துத் தள்ளுபடி செய்தனர்.
இறுதியாக, இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


