
பொதுக்கூட்டம், ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்க, நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான அனைத்து வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது அனைத்துக் கட்சிகள் , காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்டோரிடம் ஆலோசித்து வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், 10 நாட்களில் வழிகாட்டு விதிமுறைகளை சமர்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையேற்று பொதுக்கூட்டம், ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரோடு ஷோடுக்கு வழிமுறைகள் வகுப்பது குறித்து நவம்பர்- 6 வியாழக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் , நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவர் என்றும், அவை அனைத்து தொகுக்கப்பட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என கூறப்படுகிறது.


