காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் ஆயுள் காப்பீட்டுத் துறையில், நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முற்படும் ஒன்றிய அமைச்சரவையின் முடிவு, இந்திய மக்களின் உழைப்பையும் சேமிப்பையும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரைவார்க்கும் ஒரு பச்சைத் துரோகமாகும்.

ஏற்கனவே, சில்லறை வர்த்தகம், பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்பு, இரயில்வே மற்றும் வான்வழிப் போக்குவரத்து எனப் பல முக்கிய அரசுத் துறைகளில் அந்நிய முதலீடுகளை அடுக்கடுக்காக அனுமதித்து, உள்ளூர் வணிகர்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் நசுக்கி வரும் ஒன்றிய அரசு, இப்போது எல்.ஐ.சி போன்ற மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையையும் சிதைக்கப் பார்ப்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்தியதால், இலட்சக்கணக்கான சிறு வணிகர்களும் மளிகைக் கடைக்காரர்களும் வாழ்வாதாரத்தை இழந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் நாட்டின் இரகசியங்களும் தற்காப்புத் திறனும், வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் பேராபத்து உருவாகியுள்ளது.
அதேபோல், இரயில்வே மற்றும் மின்சாரத் துறையில் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் புகுந்ததால், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சேவைகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து, பொதுமக்களின் பாக்கெட்டுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த வெளிநாட்டு நிறுவனங்கள், தொடக்கத்தில் சலுகைகளை அள்ளி வீசி இந்திய நிறுவனங்களை நலிவடையச் செய்துவிட்டு, பின்னர் ஒட்டுமொத்தச் சந்தையையும் தன்வசப்படுத்தி மக்களின் மீது பெரும் பொருளாதார சுமையை ஏற்றுகின்றன. இது வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதோடு, இந்தியப் பணம் இந்திய பெருநிலத்தில் வாழும் மக்களுக்குப் பயன்படாமல், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்தைச் சுரண்ட வழிவகுக்கிறது.
அன்று ஒரு சாதாரண வணிகக் குழுவாக நுழைந்த கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்த நாட்டை அடிமைப்படுத்திய வரலாற்றை மறந்துவிட்டு, இன்று அந்நிய முதலீடு என்ற பெயரில் அதே போன்றதொரு புதிய காலனியாதிக்கச் சூழலை ஒன்றிய அரசு உருவாக்கி வருவது வேதனைக்குரியது.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத முதலீட்டை அனுமதிப்பதென்பது, இந்திய மக்களின் சேமிப்புப் பாதுகாப்பைச் சர்வதேசச் சூதாட்டக்காரர்களிடம் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
எனவே, காப்பீட்டுச் சட்டத் திருத்தங்கள் 2025 மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, அனைத்து அரசுத் துறைகளிலும் ஊடுருவியுள்ள அந்நிய முதலீடுகளை முற்றிலும் இரத்து செய்து, இந்திய நிறுவனங்களுக்கும் பொதுத்துறைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


