மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவில்லையா கவலை வேண்டாம். உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து, அதை எப்படி சரிசெய்வது, மீண்டும் 1,000 ரூபாய் பெறுவது என்பது பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி பெற்று வருகின்றனர். குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தத் திட்டம், பெண்களின் சுயமரியாதை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கியமான முயற்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தகுதியிருந்தும் சில பெண்களுக்கு இந்தத் தொகை இன்னும் கிடைக்காத நிலை காணப்படுகிறது. சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பணம் வராமல் தடைபட்டிருக்கலாம். இதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏன் தொகை வரவில்லை? – காரணங்களை தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பத்தில் உள்ள தகவல் பிழை, ஆவணங்களில் முரண்பாடு, வருமானம் அல்லது சொத்து விவரங்கள் தொடர்பான சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். இந்த விவரங்களை ஆன்லைனிலேயே தெரிந்து கொண்டு, அதற்கான மேல்முறையீட்டை (Grievance / Appeal) பதிவு செய்ய அரசு வசதி ஏற்படுத்தியுள்ளது.
மேல்முறையீடு செய்ய தேவையான ஆவணங்கள்
மேல்முறையீடு செய்வதற்கு முன், கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் வைத்துக் கொள்ள வேண்டும்:
- விண்ணப்ப எண் அல்லது குடும்ப அட்டை எண்
- ஆதார் அட்டை
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (OTP பெற)
- விண்ணப்ப நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த குறுஞ்செய்தி அல்லது தகவல்
- தேவைப்பட்டால் வருமானச் சான்று அல்லது சொத்து விவர ஆவணங்கள்
ஆன்லைனில் மேல்முறையீடு செய்வது எப்படி?
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நேரடியாக மேல்முறையீடு செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் ‘குறை தீர்வு / Grievance’ என்ற பகுதியில்:
விண்ணப்பதாரர் பெயர்
குடும்பத் தலைவர் பெயர்
மொபைல் எண்
குடும்ப அட்டை எண்
ஆகிய விவரங்களை உள்ளிட்டு Get OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைலில் வரும் OTP-ஐ பதிவு செய்து சரிபார்ப்பு முடித்த பிறகு, குறை தொடர்பான வகையை தேர்வு செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, குறிப்பு (Remarks) பகுதியில் விண்ணப்பம் ஏன் தவறாக நிராகரிக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்து Submit (பதிவேற்றம்) செய்ய வேண்டும்.
30 நாட்களில் தீர்வு
மேல்முறையீடு பதிவு செய்தவுடன், உங்களுக்கான ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும். அதன் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும். அனைத்து விவரங்களும் சரியானதாக இருந்தால், 30 நாட்களுக்குள் உங்களுக்கான ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரத் தொடங்கும்.
பெண்களுக்கு அரசு உறுதி
தகுதியுள்ள எந்த பெண்ணும் மகளிர் உரிமைத் தொகையை இழக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், பணம் வரவில்லை என்றால் தயங்காமல் ஆன்லைன் மேல்முறையீட்டை பயன்படுத்தி உரிய தீர்வு பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது – துணை முதல்வர்


