
போதை பொருள் வழக்கில் உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கும்படி நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.

போதை பொருள் வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போதை பொருளுடன் ரூ.40 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டதுடன், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணைக்காக ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அதேநேரம் நடிகர் கிருஷ்ணா கடந்த 29 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து சுமார் 11 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக போதைப் பொருள் யாரிடம் இருந்து வாங்கி பயன்படுத்தினார்? அதற்கு பணம் எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்பட்டது? மேலும் போதைப் பொருள் கடத்தல் செய்வது தொடர்பாக பணம் ஏதேனும் பரிவர்த்தனை செய்தாரா என நூற்றுக்கணக்கான கேள்விகள் நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு வாக்குமூலத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறையிடம் அளித்த ஆவணங்கள் முறையாகவும் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி அமலாக்கத்துறை ஆவணங்களை முறையாக அளிக்கும்படி கேட்டுள்ளது.
சம்மன் அளிக்கும் போதே வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அமலாக்கத்துறை கேட்டது. ஆனால் 29 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணா அளித்த ஆவணங்கள் போதிய தகவல் இல்லை. அதனால் தான் மீண்டும் சில ஆவணங்களை கேட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
1 வருடம் மேற்கொண்ட பணபரிவர்த்தனை ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பித்த நிலையில், சில விவரங்கள் தெளிவாக இல்லாததால் அந்த ஆவணங்களை மீண்டும் அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளது. இதற்கிடையில்
நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகாத நிலையில் , மீண்டும் சம்மன் அளிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


