
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் , 3 பேர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி , கோவையில் தங்கி கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி, ஞாயிறு இரவு கோவை விமான நிலையம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரை ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஆண் நண்பரையும் , மாணவியையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பீளமேடு போலீஸார், தனிப்படை அமைத்து தப்பியோடிய மூவரையும் தேடி வந்தனர். சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீஸார் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில் மாணவியை பலாத்காரம் செய்தா 3 பேரையும் அடையாளம் கண்டு , நள்ளிரவு 12 மணியளவில் அவர்களை போலீஸார் அதிரடியாக சுட்டுப்பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை காவல் ஆணையர் சரவணன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரையும் அடையாளம் கண்டதாகவும், குற்றவாளிகளான சகோதரர்கள் சதீஷ்(20), கார்த்திக்(21) மற்றும் அவர்களது உறவினரான குணா(30) ஆகிய 3 பேரையும் சுட்டுபிடித்ததாகவும் தெரிவித்தார். மதுபோதையில் திருட்டு வாகனத்தில் வந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும், மூவர் மீது ஏற்கனவே சொலை மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார். போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டுப்பிடிக்க நேர்ந்ததாகவும், 2 பேரை இருகால்களிலும், ஒருவரை மட்டும் ஒரு காலிலும் சுட்டு பிடித்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மூவர் சுட்டுப்பிடிக்கப்பட்ட கோவை துடியலூர் என்னுமிடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.


