மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி விரும்பினால் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயன்பெற்றுள்ள 1 கோடி பயனாளிகளின் பட்டியலை வழங்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெற்ற பள்ளி சுகாதரம் மற்றும் ஆரோக்கிய தூதுவர் திட்டத்தின் கருத்தரங்கில் சிறந்த ஒருங்கிணைப்பு செயல்முறை மாநிலம் விருது மற்றும் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய இவ்விருதுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஆரோக்கிய தூதுவர் திட்டம் மூலம் 70ஆயிரம் ஆசிரியர்கள் 41 லட்சம் குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதேபோல் சிறந்த மாதவிடாய் விழிப்புணர்வு விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தின் மூலம் 43 லட்சம் இளம் பெண்கள் பயனடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார்.
இந்தியா முழுவதும் பாரட்டுகளை பெற்றுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரின் பாராட்டை பெற்றுள்ளதாகவும், இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில், இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என கூறியுள்ள மா. சுப்பிரமணியன்.
இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை நேரடியாக வருகை தந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கியுள்ளதையும், இதுவரை எந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நேரடியாக செல்லாத இடத்திற்கு தாம் சென்று ஆய்வு மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு தனமாக அறிக்கை விடுத்துள்ளார், எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி என்றும் அவர் விரும்பினால் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயன்பெற்றுள்ள 1 கோடி பயனாளிகள் பட்டியலை வழங்க தயார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.
மேலும், நீட் விலக்கு மசோதா குறித்து ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி மறுவிளக்கம் மீண்டும் அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புகளுக்கான 14 பாட புத்தகங்கள், தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் 5 புத்தகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மற்ற புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளிட்ட 130 மருத்துவர்களின் காலி பணிகளுக்கான நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக ஒப்பந்த செவிலியர்கள் அனைவருக்கும் 20 நாட்களுக்குள் பணி ஆணை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.
