செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தகவல் கொடுத்துவிட்டு வருவதற்கு பெயர் ரெய்டு இல்லை. அதிகாரிகளை கடமையாற்ற விடாமல் தடுத்து, தாக்கியுள்ளார்கள். இதில் செந்தில்பாலாஜியை தான் முதலில் கைது செய்ய வேண்டும். ரெய்டு செய்ய வருமானவரித்துறை அதிகாரிகள் வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட காவல்துறை சொல்கிறது. காவல்துறை இன்று ஏவல்துறையாக மாறியுள்ளது. யாருக்கும் சொல்லாமல் வருவது தான் ரெய்டு, சம்பந்தம் பேச வராங்களா? இல்லை டின்னருக்கு வராங்களா? ரெய்டுனால் சொல்லாமல்தான் வருவாங்க! கதவை திறக்கவில்லை என்றால் சுவர் ஏறிதான் குதிப்பார்கள். வருமான அதிகாரிகளை தாக்கியுள்ளனர். அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை. நியாயம் பேசுவோருக்கு பாதுகாப்பு இல்லை. கனிமவள கொள்ளையை தடுக்கும் விஏஓக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இரு மாநிலங்களுக்கிடையே மோதல் உருவாகும்” எனக் கூறினார்.