சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு, பல்வேறு தரப்பினர் இடையே நடத்திய தொடர் சந்திப்புகளுக்குப் பின்னர், சாம்சங் நிர்வாகம் ஊழியர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் சலுகைகளை நிறைவேற்ற சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மற்ற கோரிக்கைகள் ஊழியர்கள் பணிக்கு திரும்பியவுடன் பரிசீலிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர்கள் குழு, சாம்சங் நிறுவன நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த சாம்சங் நிர்வாகத்தின் தலைமையை பாராட்டியுள்ளார். மேலும் ஆக்கப்பூர்வமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டிஆர்பி ராஜா குறிப்பிட்டுள்ளார். தங்களது கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் தயாராக இருப்பதை அறிந்து தொழிலாளர்கள் பாராட்டியதாகவும், தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான பிரச்சினையை பொறுத்தவரை, அது நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டப்பூர்வ செயல்முறையை அரசு மதிக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உறுதி அளித்தார்.
மேலும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பி, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் திமுக அரசின் பயணத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நமது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களது நல்வாழ்வுக்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதன்மையான முன்னுரிமை அளிப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.