புழு கூட நாலு அங்குலம் நகரும் – சீமான் விமர்சனம்
கலாஷேத்ரா விவகாரத்தில் குழு அமைத்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்கள் வெளியே வந்து போராட அனுமதித்திருக்க கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் குழு மட்டுமே அமைக்கப்படுகிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா? எத்தனை காலத்திற்கு நிலக்கரி எடுக்க முடியும்?. நான் இருக்கும் வரை நிலக்கரி எடுக்க முடியாது.
மூக்கையாத்தேவர் புகழை போற்றி ஏப்ரல் 15 ஆம் தேதி உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்” எனக் கூறினார்.