தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்று, தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பி.எஸ். ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை தமிழக அரசு நியமித்துள்ளது.
விஜய் நாராயண் ஏற்கனவே கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதன் மூலம் இரண்டு வெவ்வேறு அரசுகளின் கீழ் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக பதவி வகிக்கும் சிறப்பைப் பெற்றுள்ளார்.
மேலும், விஜய் நாராயண் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலின் உறவினர் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டம், நிர்வாக சட்டம் மற்றும் வணிகச் சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞராக அறியப்படுகிறார். அவர் விரைவில் புதிய தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்க உள்ளார்.
உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
