அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது- சபாநாயகர்
அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “யார், யார் அமைச்சராக செயல்பட வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுதான் ஆளுநரின் வேலை. அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம். அல்லது பதவி விலகுமாறு முதல்வர் அறிவுறுத்தலாம். அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் நல்ல மனிதர். உணர்வுகளின் வெளிப்பாடுதான் ஆளுநரின் நேற்றைய அறிவிப்பு.

உணர்ச்சிவசப்பட்டு சட்டமன்றத்தில் தேசிய கீதத்துக்கு கூட ஆளுநர் எழுந்து நிற்கவில்லை. ஆளுநர் தன் கடமைகளை பாதுகாத்து நடக்க வேண்டும். தன் நிலையிலிருந்து தவறாமல் இருக்க வேண்டும். முதலமைச்சரின் பரிந்துரை இன்றி அமைச்சரை ஆளுநர் நீக்குவது தவறாக அமைந்துவிடும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும். தனக்கு அதிகாரம் இல்லை என்பதை 4 மணி நேரத்தில் தெரிந்து கொண்டார் ரவி, உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காமல், பொறுப்புணர்வுடன் ஆளுநர் செயல்பட வேண்டும்” என்றார்.