பற்களைப் பிடுங்கிய விவகாரம் – அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி துன்புறுத்திய புகார் தொடர்பாக, இன்று அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா விசாரணை மேற்கொள்கிறார்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., அரசு முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அவர்களை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் படி விசாரணை அலுவலர் இன்று (10.04.2023) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது விசாரணை அலுவல்களை மேற்கொள்ள உள்ளார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் காவல்துறையால் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புவோர் இன்று (10.04.2023) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.
மேலும் ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியர் / உட்கோட்ட நடுவரிடம் புகார்/ வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்பினாலோ, புகார்/ கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம்.
பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம்.
மேலும் மேற்படி விசாரணை அலுவலரிடம் நேரடியாக புகார் அளிக்க இயலாதவர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ +918248887233 என்ற தொலைபேசி (Call & Whatsapp) எண்ணிலோ (10.04.2023 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை) புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.” இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.